Hindu Practices and Superstitions

தோழர்களுக்கு வணக்கம்.
பெரியார் கொள்கை பேசும் பெரியாரிஸ்ட்களை இந்துத்துவம் பேசும் மக்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் படித்த மக்களும் கூட இன்னும் கடவுள் நம்பிக்கையில் தீவிரம் காட்டுவது தான்.
நாம் ஆறாம் வகுப்பில் படித்த சார்லஸ் டார்வின் கொள்கைகளை ஒருபோதும் நினைவு படுத்த மாட்டார்கள். நாம் நினைவு படுத்தினாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். படித்த கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அர்த்தமுள்ள இந்துமதம் என்பார்கள். உதாரணம் கூட காட்டுவார்கள்.
மஞ்சள் பூசி குளித்தால் தூக்கமின்மை நீங்கும் என்பார்கள். தாலியில் மஞ்சள் பூசி கட்டுதல் பெண்ணுக்கு மார்பு புற்றுநோய் வராமல் இருக்க என்பார்கள். குங்குமம் புத்தி கூர்மை ஏற்படுத்தும் என்பார்கள். முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். மருதாணி குளிர்ச்சி தரும் மற்றும் புத்தியை சாந்த படுத்தும். நெற்றி சுட்டி அணிவது சைனஸ் மற்றும் தலைவலியை சீர்படுத்தும் என்றும் சொல்வார்கள். இப்படி பல பல உதாரணங்கள் அவர்கள் சொல்ல இந்து மதத்தை அர்த்தமுள்ள இந்து மதம் என்று சுட்டி விடுவார்கள்.
மேலே கூறிய எதையும் நான் மறுக்கப்  போவதில்லை. ஏதும் தவறுமில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் மஞ்சள் புற்று நோயை குணப்படுத்தும் சரி. அப்படி பட்ட மஞ்சளை யார் பூசி கொண்டால் என்ன. திருமணம் ஆன கணவனை இழக்காத பெண் தான் பூசி கொள்ள வேண்டுமானால் கணவனை இழந்த பெண்கள் புற்று நோயால் சாகலாமா? அவர்கள் மஞ்சள் பூசினால் புற்று நோய் தீராதா என்ன. கணவனை இழந்த பெண் மஞ்சள் பூச கூடாது. வளையல் அணிய கூடாது. வெள்ளை புடவை மட்டுமே உடுத்த வேண்டும். மருதாணி வைக்க கூடாது. யார் வைத்த சட்டங்கள்? இது எப்படி இந்துத்துவத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
மேலும் பெரியார் கொள்கை பேசும் நாங்கள் எப்போதும் கொண்ட சொல்லில் நிற்க உடன்பட வில்லை. நாங்கள் சொல்வது மட்டுமே சரி என்றும் சொல்லவில்லை. தவறென்றால் அதை நிரூபிக்க முடியுமென்றால் நாங்கள் எங்களை திருத்தி கொள்ள தயாராகவே உள்ளோம். எங்கள் கொள்கை பெரியார் நம்பிக்கையில் சுய மரியாதை காட்டுவது தான்.

Comments

Post a Comment