இடஒதுக்கீடு | பொருளாதார அடிப்படையில் ஏன் இடஒதுக்கீடு கூடாது

பொருளாதார அடிப்படையில் ஏன் இடஒதுக்கீடு கூடாது என்ற கேள்விகளை கடந்த ஓர் பத்தாண்டுகளில் சரளமாக காணலாம். பிற்படுத்த பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன சாதியினரும் பெற்றோர் செல்வம் பெற்றும் கூட கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்று வருவதை பார்த்து இந்த எண்ணம் பலர் மனதில் எழுந்திருக்கலாம் ஆனால் இப்படிப்பட்ட பட்டியல் இன மக்கள் செல்வம் பெற்று இருப்பது ஆயிரத்தில் ஒன்று என்று  மட்டுமே கருத முடியும். மேலும் இட ஒதுக்கீடு என்பது ஏன் சாதி அடிப்படையில் இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பலர் கருதுவார்கள்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன் சாத்தியமில்லை:

முதலில் இட ஒதுக்கீடு என்பதற்கும் பொருளாதாரத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. அதன் தொடக்கப் புள்ளி  வேறு. இதன் தொடக்கப் புள்ளி  வேறு. மேலும் இட ஒதுக்கீடு என்பது கல்லூரிகளில் பிற்படுத்த பட்ட மற்றும் பட்டியல் இன மக்கள் படிக்க கொண்டு வரப்பட்டதல்ல. இன்றைய இளைஞர் பலர் அப்படி நினைத்தே இட ஒதுக்கீட்டை ஓரக்கண் கொண்டு பார்க்கின்றனர்.  ஒரு நாடு சுதந்திர நாடு என்று கருதும் போதும் ஜனநாயக நாடு என்று கருதும் பொழுதும் அதில் அனைத்து மக்களுக்கும் எல்லா வகையிலும் பங்கு உண்டா  என்று பார்க்கும் போது அந்த குறிப்பிட்ட சமூகத்தினரை வழிநடத்த அல்லது அவர்களின் அடையாளமாய் அரசியல் சட்டமன்றத்தில் யார் பிரதிபலிக்கிறார் என்பது முதல் பார்வை. அப்படி அந்த குறிப்பிட்ட அரசியல் சமூகத்தினரின் அடையாளமாய் நிற்க கல்வி அவசியம் என்றாகும்  போது கல்விக்கு இட ஒதுக்கீடு தேவை என்று  முடிக்க வேண்டி உள்ளது.  மேலும் ஒரு இனம் வாழ எதுவெல்லாம் வேண்டுமோ அதிலெல்லாம்  இட ஒதுக்கீடு தேவை என்பதே சரியாகும். தன் வாழ்வியலில் கலை வடிவில் சமூக சிந்தனையில் அரசியலில் கல்வியில் என எதிலெல்லாம் ஒரு இனம் ஒடுக்கப்பட்டதோ அதிலெல்லாம் இட ஒதுக்கீடு வேண்டும். இந்திய பாராளுமன்ற முறையில் அரசியல் அதிகாரம் நான்கு வகை படும்.





  • சட்டமன்றம்
  • நிர்வாகத் துறை
  • ராணுவம்
  • நீதித் துறை

  • இது அனைத்திலும் அனைத்து சமூக மக்களும் சரி சமமாக வாழ வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம். பட்டியல் இன மக்கள் கல்வியினால் பின் தங்கி உள்ளனர். மலைவாழ் மக்கள் சமூக வாழ்க்கையிலேயே பின் தங்கி உள்ளனர்.

    அது ஏன் என்று விவாதிக்கும் முன் அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

    இட ஒதுக்கீட்டில் நெருங்கிய தொடர்பு கொண்டது சாதி. சாதிக்காக மட்டுமே இட ஒதுக்கீடு. எனின் சாதி என்றால் என்ன?  காந்தியின் கூற்றுப் படி சாதி என்பது ஆடம் ஸ்மித்தின் Division Of Labour. அதாவது வேலையை பகுத்து செய்வது. ஒரு கடிகாரம் செய்யும் போது ஒருவரே அனைத்து பாகங்களையும் தயார் செய்வதை விட ஒருவர் ஒரு பாகம் செய்வது சிறந்தது என்பதே அந்த கோட்பாடு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகங்களை செய்து அதை கடைசியில் ஒருவர் இணைக்கும் போது உற்பத்தி திறன் அதிகமாவது மட்டும் அல்ல அந்த ஒரு பாகத்தில் அந்த ஒருவன் அதிக அறிவாற்றலும் பெறுகிறான். இதையே காந்தி முன்மொழிந்தார். ஆனால் அண்ணல் அம்பேத்கர் இதை வேறு வடிவில் பார்க்கிறார். சாதி என்பது வேலையை பகுப்பது அல்ல. இது வேலை ஆட்களை பிரிப்பது என்றார். ஒரு குறிப்பிட்ட சாதி கோவிலில் அர்ச்சனை செய்யும். இன்னொன்று விவசாயம். மற்றொன்று செருப்பு தைக்கும். மற்றொன்று மலம் அள்ளும். இது எப்படி வேலையை பிரிப்பது போலாகும் என்று கேள்வி எழுப்பினார் அம்பேத்கர். இது படிநிலை சமத்துவமின்மை என்றே அம்பேத்கர் கருதினார். வேறு எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும். ஆனால் இந்த படிநிலையை மாற்ற முடியாது போலிருந்தது. ஏனெனில் இந்த படிநிலை அவரவர் பிறப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிறந்தால் அதுதான் நீ என்கிறது. ஒருவன் என்னதான் வீர வம்சம் என்று கூறி கொண்டாலும் கவுண்டன் நாடார் நாயக்கர் என்று பெருமை பேசினாலும் மன்னர் பரம்பரை என்று பேசினாலும் இப்படிநிலையில் மேலே உள்ளவனுக்கு அவன் சூத்திரன் தான். மேலும் வேலையை தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

    அடுத்து இட ஒதுக்கீடு, இருப்பதை பகிர்ந்து கொடுக்கும் திட்டம் கிடையாது.  இரண்டாவது, இது வறுமை ஒழிப்பு திட்டமும் கிடையாது. பிற்படுத்த பட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட, பட்டியல் இன மக்கள் மலைவாழ் மக்கள் போன்றோர் அவர்களால் சக்தி வாய்ந்த அல்லது உயர் தகுதி பெற்று வரவே முடியாத போது அவர்கள் சமுதாயத்தில் சமமாக சுயமாக வாழ கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு. (இவர்களால் வரவே முடியாது. மிகவும் கடினம்) அதில் தவறி வந்த ஒரு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். இப்படிப்பட்ட சமூகத்தில் எந்தவொரு சலுகையும் கொடுக்கப்படவில்லை என்றால் அது அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் கீழே தள்ளி விடும் என்ற காரணத்தால் தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதை ஆங்கிலேயரே உணர்ந்துவிட்டார்கள் என்பதே உண்மை. அனைவரையும் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்க மனிதராக உருவாக்க முடியாது என்பது இயல்பு. இதன் நோக்கம் அந்த சமூகத்தில் ஒரு சிலர் அதிகாரத்தில் சமூகத்தில் கல்வியில் அரசியலில் விளையாட்டில் பங்கு கொள்வார்கள். அவர்கள் அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலிப்பார்கள். உதாரணம் பாராளுமன்றத்தில் எவ்வளவு இடம் உள்ளதோ அவ்வளவு உறுப்பினர்களே இருக்க  முடியும். அதில் தலித் எவ்வளவோ அவ்வளவே செல்ல முடியும். ஆக, அந்த அதிகாரத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரு இடம் வேண்டும் என்பதே நோக்கம். அதனால் இதையும் ஏழைகளுக்கு உதவி செய்வது என்பதையும் குழப்பிக்கொள்ள கூடாது. ஏழைகளை காக்க வேண்டும் என்பது ஒருபுறம். அதற்கு வேறு திட்டங்கள் உள்ளன.

    அதெல்லாம் அந்த காலம். இப்போது எல்லாம் மாறி விட்டன என்று கூறும் அனைவர்க்கும் ஒரு புள்ளிவிவரம் காட்ட ஆசைப் படுகிறேன். மனு தர்மத்தின் படி பார்ப்பனர் அல்லாதோர் சூத்திரர்கள் (அதில் பல வகை). இந்த மேல் சாதி ஆதிக்கம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் அல்ல இன்றும் தழைத்து நிற்கிறது என்பது உண்மை. இந்த பார்ப்பனிய ஆதிக்கத்தால் தான் அன்று பெரியாரும் அம்பேத்கரும் விடுதலையை தூரம் நின்று வேடிக்கை பார்த்தனர். இது உண்மையான சுதந்திரம் இல்லை என்று இருவரும் முழங்கினர். அதிகாரத்தை பார்ப்பனிய கூட்டமும் தொழில் வழங்களை பணியாக்கள் கூட்டமும் நிலங்களை நவீன சூத்திரர்களும் பிடிக்க போகிறீர்கள். இது மூன்றையும் நீங்கள் பிடித்துக்கொள்ள எங்களுக்கு எதற்கு சுதந்திரம் என்று கூவினர். இன்று ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 7௦ ஆண்டுகளுக்கு ஆன பின்  இன்றைய தொழில் வளம் பெற்றுள்ள முதலாளிகளை எடுத்துப் பார்த்தால் அதானியோ அம்பானியோ அனைவரும் பணியாக்கள் கூட்டமாகவும் அரசியலில் பார்ப்பனிய கூட்டமாகவும் தானே உள்ளனர்.

    மோடி பார்ப்பனிய வழி கிடையாதே? அதுவும் ஒரு தந்திரம் மட்டுமே. இந்திய அரசியலில் யார் ஒருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன, தலித் இன மக்களை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்கிறாரோ அவரே வெற்றி பெற முடியும். அந்த அரசியலை இயக்குவது பார்ப்பனிய கும்பலாகத் தான் இருக்கும். உதாரணமாக இம்ரான் கான் பாகிஸ்தானில் வெற்றி பெறுகிறார். ஜனநாயகம் கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் தோற்கிறார். ஏன்? பாகிஸ்தானில் இராணுவமே அதிக பலம் பெற்றது. பாக்கிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து எந்த ஜனநாயக கட்சியும் செயல் பட முடியாது. தன்னிச்சையாக இம்ரான்கானால் ஒரு அடி கூட தன்னிச்சையாக எடுத்து வைக்க முடியாது. அதேதான் இந்திய அரசியலிலும். மோடி பார்ப்பனர் அல்லாதவராய் இருக்கலாம்.  ஆனால், அவரை செயல் பட வைக்கும் அனைத்து தலைவர்களும் பார்ப்பனர்கள் தான். அடுத்து வங்கிகளை எடுத்து கொண்டால் அனைத்து வங்கிகளிலும் ஊழல் நடக்கிறது. 8.5 லட்சம் கோடி வாராக்கடனாக அரசு அறிவிக்கிறது. அப்படி இருக்க அந்த கடன் வாராது என்று தெரிந்து ஏன் கடன் கொடுக்கிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? யாருக்கு கொடுத்திருக்கிறார்கள்? பணியாக்களுக்கு.

    வங்கி மேலாளர்கள் விபரம்:

    தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்களில் 91% பார்பனியர்கள் (2016 புள்ளி விபரம்). மற்ற பிற்படுத்த பட்டோர் 3.5%. பட்டியல் இன மக்கள் 5%.  சற்று பின்னோக்கி செல்வோம். 1981ல் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு பணியின் புள்ளி விபரம். அன்று மொத்த பார்ப்பனர் 3.6%.  பத்து ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய மொத்த பேரில் 48% பார்ப்பனர்கள். இதர இந்துக்கள் மொத்த அளவு 87.9%. பத்து ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய மொத்த பேரில் 36% தான் இருந்தனர். இஸ்லாமியர்கள் மொத்தம் 6.2%. பத்து ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய மொத்த பேரில் 5.5%. இந்திய கிருத்துவ மக்கள் 2%. பத்து ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய மொத்த பேரில் 4.9%. புள்ளி விபரங்கள் என்று கிடைத்ததோ அப்பொழுது எடுத்த விபரங்கள் இவை அனைத்தும். இது, இல்லாத ஒன்றை பொய்யை கதை கட்டி மிளகாய் அரைப்பது அல்ல.

    195௦ இல் அம்பேத்கர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. மெட்ராஸ் மாகாணம் நீதி கட்சி இருந்த பொழுதே இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக கொண்டு வந்த மாகாணம். இம்முறை மற்ற இடங்களுக்கும் சென்றால் பார்ப்பனியர்களுக்கு மிகுந்த பிரச்சனை வரும் என்பதால் அதை தடுக்க அந்த சட்டக் குழுவில் இருந்த பார்ப்பனர் மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு வழக்கு தொடர்கிறார். செண்பகம் துரைராஜ் என்னும் ஒரு பெண்மணி, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்காத ஒரு பெண்மணி, தான் விண்ணப்பித்தால் எனக்கு இந்த  இட ஒதுக்கீட்டால் மருத்துவம் படிக்க முடியாமல் போகும் என்று வழக்கு பதிவு செய்கிறார். நீதி மன்றமும் இது சரி தான் இந்த ஓட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது. அப்போது முதல்வராக இருந்த ஓமந்தலூரார் உச்ச நீதிமன்றம் செல்கிறார். அங்கே உச்ச நீதி மன்றமும் இட ஒதுக்கீடு செல்லாது என்று சொல்லி விடுகிறது. பின்னர் பெரியார் போர்க்கொடி தூக்குகிறார். அம்பேத்கர் அதற்கு ஆதரவு தருகிறார்.  பிரச்சனை கை மீறி போகிறது. எந்த அளவு என்றால் நேரு பாராளுமன்ற உரையில் நீங்கள் மெட்ராஸ் மாகாண மக்களின் வாழ்வியலில் கை வைக்கிறீர்கள். அது பிரிவினை வரை கொண்டு செல்கிறது என்று பேசுகிறார். நாடு முழுவதும் போர் பரவும் நிலை. சட்டம் இயற்ற பட்டது. இது அப்போது.

    நீட். அனைவருக்கும் தெரிகிறது தமிழ் கேள்விகளில் பிழை உண்டு என்று. பிழைகள் என்று நீட் நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது. அப்பிளைகள் இல்லாவிட்டால் தமிழ் பெண் ஒருவர் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று விட முடியும் என்றும் தெரிகிறது. பிழைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அடுத்த வருடம் பார்த்து கொள்வோம் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இது இப்போது. ஆக அன்றும் இன்றும் நீதி துறையில் என்ன மாற்றம் காண முடிகிறது? அப்போது, நீதி துறையில் யார் உள்ளனர்? அங்குள்ள இட ஒதுக்கீடு என்ன? கேள்வி கேட்க வேண்டுமா வேண்டாமா? இப்பொழுது எழுபது வருடம் பின்னோக்கி சென்று பார்த்தால், அன்று அம்பேத்கரும் பெரியாரும் சொன்னது உண்மையா பொய்யா?

     நீதி துறையில் உயர்நீதிமன்ற  நீதிபதிகளில் மொத்தம் 87.5% பார்ப்பனர் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் 91% பார்ப்பனர். அப்போது யார் நலனுக்காக தீர்ப்புகள் வருகிறது? அம்பேத்கர் சொன்ன பெரியார் சொன்ன அனைத்தும் உண்மையா பொய்யா? மீண்டும் பின்னால் சென்றால் காமராஜர் பெரியாரால் காங்கிரஸில் பனி அமர்த்தப்பட்டவர்.  மாவட்ட செயலாளர் பதிவுக்காக குடியாக்கத்தில் போட்டியிட வைத்தது பெரியார். பெரியார் கண்டுபிடித்து அரசியலில் நின்ற காமராஜர் கல்வி கூடங்களை கட்டி பிள்ளைகளை படிக்க வைக்க திட்டம் சொல்கிறார். நினைத்த அளவில் திட்டம் வெற்றி பெறவில்லை. நீதி கட்சி பள்ளிகளில் செயல் படுத்திய மத்திய உணவு திட்டத்தை நீ செயல் படுத்து என்று பெரியார் ஆலோசனை சொல்கிறார். காமராஜர் மத்திய திட்ட குழுவிற்கு சென்று இந்த திட்டத்தை எடுத்துக் கூறும் போது அங்கிருந்த அனைவரும் சிறித்து காமராஜரை அசிங்க படுத்தி அனுப்புகிறார்கள். ஆசிரியன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவானா அல்லது சமைத்து தருவானா? கணக்கு போட கற்று தருவானா அல்லது மளிகை விலை என்ன என்று பார்ப்பானா என்று சிரிக்றார்கள். என் அரசாங்கம் திவால் ஆனாலும் பரவாயில்லை. இத்திட்டத்தை நான் செயல் படுத்துவேன் என்று காமராஜர் நேரு விடம் சென்று கோவம் கொண்டு சொன்னாராம். பின்னர் நேரு திட்ட குழு தலைவரை அழைத்து அவர் அதை செய்து முடிக்காமல் ஓய மாட்டார் பாருங்கள் என்றாராம். இப்போது 2009க்கு வருவோம். 2009இல் மத்திய அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது. எப்போது? ஐம்பது வருடம் கழித்து.

    மீண்டும் இட ஒதுக்கீடு: பின்னர் திராவிட கழகம் வருகிறது. கருணாநிதி சட்டநாதன் கமிஷன் வருகிறது. பின்னர் MGR ஜெயலலிதா என மாறி மாறி இதை அதிகம் செய்கின்றனர். கலைஞர் ஆரம்பித்த விதை அதிவேகமாக வளர்கிறது. அதன் வரலாறு:

    சட்டநாதன் கமிஷன் OBC
    SC
    25% to 31%
    16% to 18%
    MGR BC
    SC
    31% to 50%
    18%
    Kalaignar ST 1%
    Kalaignar Rural  15%
    1989 Inner segment - MBC MBC - 20%
    2006 Inner segment - MBC Dalit- 3%

    இதன் விளைவு :

    தலித் இட ஒதுக்கீட்டின் முன் மருத்துவ படிப்பில் வருடத்திற்கு 4 முதல் 14 பேர் வரை மட்டுமே பட்டம் பெறுவர். ஆனால் தலித் இட ஒதுக்கீட்டின் பின் வருடத்திற்கு 140 பேர் பட்டம் பெறுகின்றனர். பொறியியலில் 150யில் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டுமே.

    இது ஒருபுறம் இருக்க மற்றொரு புள்ளி விபரத்தை நாம் பார்க்க வேண்டும்: 1996, 2005, 2016 ஆகிய ஆண்டுகளின் மருத்துவ நுழைவுத்தேர்வு கட் ஆப் மதிப்பெண்கள்:


    Class 1996 2005 2016
    OC 294 297 198.5
    BC 289 295 197
    MBC 283 294 196
    SC 269 291 195

    இதை நன்கு கவனித்தால் புரியும். பட்டியல் இன மக்களின் பிள்ளைகள் எவ்வளவு படித்து முன்னேறி வந்துள்ளார்கள் என்று. 269 (Out of 300) இருந்து 195 (Out of 200) கட் ஆப் மதிப்பெண். இட ஒதுக்கீட்டால் சமூகம் முன்னேற்ற பாதையில் செல்கிறதா இல்லையா? ஆக நாம் மாற்ற வேண்டியது இட ஒதுக்கீட்டு முறையை அல்ல கல்வி முறையை.

    இறுதியாக அமெரிக்காவில் நடந்த ஒரு வழக்கின் முடிவுகளை மட்டும் பார்ப்போம். அமெரிக்கா மிச்சிக பல்கலைக்கழத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. வழக்கு தொடுத்தவர் ஒரு வெள்ளை பெண்மணி. Affirmative Action Policy என்ற சட்டத்தால் எனக்கு இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுக்கிறார். அத்துறையின் தலைவர் தாமஸ் ஒரு ஆய்வறிக்கையை சமர்பிக்கிறார். அதில் எந்தவொரு பல்கலைக்கழகம் தன் சமூகத்தை, வாழ்வியல் முறையை ஒத்து இருக்கிறதோ அதன் உற்பத்தி மூன்று மடங்கு மெரிட் கல்லூரிகளை விட அதிகமாய் உள்ளது என்று சொல்கிறார். உதாரணத்திற்கு சென்னை IIT. அந்த IIT கும் அதன் தடுப்புச்சுவருக்கு வெளியிலும் சம்மந்தமே இருக்காது. உள்ளே வேறு உலகம். வெளியில் வேறு உலகம். படிப்பவர்கள் அனைவரும் எங்கேயோ இருந்து வந்து படிப்பவர்கள். அப்படி இருப்பதை விட எந்த பல்கலைக்கழகம் சொந்த மண் சார்ந்த வாழ்வியலில் தன்னுடன் இயங்குகிற மாணவர்களை கொண்டு வாழ்கிறதோ அந்த பல்கலைக்கழகம் சிறந்து செயல்படுகிறது என்கிறார். இந்த வழக்கு தீர்ப்பு மிக முக்கியமானது. மேலும் இந்த வழக்கில் Bill Gates and Warren Buffet போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் உள்ளே வருகிறது. எங்கள் நிறுவனங்களில் நிற பாகுபாடு இல்லாத குழுக்களில் தான் அதிக உற்பத்தி உள்ளது என்றும் ஒரே நிறம் சார்ந்த மெரிட் குழுக்களில் உற்பத்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது என்றும் கூறியுள்ளனர். இந்த சட்டத்தினால் தன் நிறுவன உற்பத்தி மட்டும் அல்ல ஒட்டு மொத்த நாட்டின் உற்பத்தி பெருகி உள்ளது என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் Bill Gates ம் கூறியுள்ளனர்.

    ஆக, இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படை சார்ந்தது அல்ல. அனைத்து சமூகமும் சரி சமமாக வாழ வழிவகை செய்வதாகும். சாதி பிரிவினை இன்றும் உள்ளது என்பது உண்மை. மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் 2016 புள்ளி விபரம். திராவிட இயக்கங்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் சமுதாய வளர்ச்சி கண்டுள்ளதும் உண்மை.


    நன்றி: தோழர் எழிலன் மற்றும் தோழர் ஜெயரஞ்சன்.

    இப்படிக்கு,
    சதீஷ்குமார் முத்துசாமி.


    Comments

    Post a Comment