வசன நடையில் ஓர் கவிதை!

இதே நாள். இதே நேரம். ஏதோ ஓர் பள்ளிக்கூடம். ஆறாம் வகுப்பறை.

ஆசிரியர் கேட்கிறார். நெப்போலியன் போனாபர்ட் எப்போது இறந்தார்? ஒருவன் சொன்னான் 1000 வருடங்களுக்கு முன்பு. மற்றோருவன் 100 வருடங்களுக்கு முன்பு. உண்மையில் நெப்போலியன் எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. சரி. நெப்போலியன் என்ன செய்தார்? சிலர் நெப்போலியன் போர்களில் வென்றார் என்றனர். சிலர் தோற்றார் என்றனர். உண்மையில் நெப்போலியன் யாரென்றே ஒருவருக்கும் தெரியாது.

அப்போது கடைசி வரிசையில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் சொன்னான், "நெப்போலியன் அப்பாஸ் பாய் தோப்பின் தெருமுனையில் கறிக்கடை வைத்திருக்கும் அப்துல்லாவின் நாய். அந்த அப்துல்லா நெப்போலியனுக்கு சாப்பாடும் போடாமல் கடுமையாக வேலையும் வாங்கி வந்ததால் அந்த நெப்போலியன் இன்று காலை பசியாலும் பட்டினியாலும் இறந்து போனான்" என்று. முதன் முதலாக அந்த நெப்போலியனுக்காக அறையில் இருந்த அத்தனை மாணவர்களும் வருத்தப்பட்டனர்! துயரப்பட்டனர்! இரக்கப்பட்டனர்! 

மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியது, போரையும் கொல்வதைப் பற்றியுமா அல்லது மனிதத்தையும் அன்பைப் பற்றியுமா? உண்மையில் சாதிப்படுகொலை நடந்தாலோ இனப்படுகொலை நடந்தாலோ, அது உலகின் ஏதோ ஒரு முனையில் ஏதோ ஒரு அத்துவானக்காட்டில் நடப்பதாக நினைத்துக்கொண்டு அதை விட்டு வெகுவேகமாக விலகிச் செல்லும் நாம், சாலையில் ஓர் நாய்க்குட்டி அடி பட்டு இறந்தால் கண்ணீர் விடுகிறோம். உண்மையில் அனைவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மனிதத்தை இழந்து வருகிறது. அதை மீட்க நம் குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு அன்பை ஊட்டி வளர்ப்போம். பாரபட்சமில்லாமல் அத்தனை சாதியும் கொடுமையானது என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவோம்.  அவர்களுக்கு சாதி இல்லை என்று சொல்லித்தரக் கூடாது. சாதி இருந்தது. இன்னும் இருக்கிறது. அது எவ்வளவு கொடூரமானது. அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லித் தர வேண்டும். 

Comments